Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Saturday, August 8, 2015

கம்பு காய்கறி கொழுக்கட்டை

கம்பு காய்கறி கொழுக்கட்டை + முளைகட்டிய பயறு குழம்பு
கம்பு காய்கறி கொழுக்கட்டை + முளைகட்டிய பயறு குழம்பு

கம்பு காய்கறி கொழுக்கட்டை
கம்பு காய்கறி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

  1. கம்பு மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. தண்ணீர் – 1/2 குவளை
  3. வெங்காயம் – 1/4 குவளை
  4. நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி) – 3/4 குவளை
  5. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  6. மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
  7. கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
  8. சீரகம் – 1/4 தேக்கரண்டி
  9. நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
  10. இந்துப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

  1. ஒரு வாணலியில் கம்பு மாவை போட்டு, 7 முதல் 8 நிமிடங்கள் கம்பு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் மாவை சில நிமிடங்களுக்கு ஆற வைக்கவும்.
  2. பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை சற்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணையை ஊற்றவும். அது சூடானதும் சீரகம் போட்டு பொரிய விடவும். பின்னர் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இந்துப்பு சேர்த்து, சில நொடிகள் வதக்கவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பச்சைப்பட்டாணியை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் விரைவில் வேக வேண்டுமெனில், வாணலியை சில நிமிடங்கள் மூடி வைக்கவும். அடிபிடிப்பது போல் இருந்தால் மட்டும், சிறிது தண்ணீர் தெளிக்கவும். காய்கறிக் கலவை தண்ணீர் பதம் இல்லாமல் வெந்து விட்டால், அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை சற்று ஆற விடவும்.
  3. காய்கறிக் கலவையை கம்பு மாவு இருக்கும் பாத்திரத்தில் போடவும். சுவைக்கேற்ப இந்துப்பைக் கலக்கவும்.
  4. மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சுடுநீரை கம்பு மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கையால் தொடும் சூட்டில் இருந்தால் அப்படியே நன்றாக சப்பாத்தி மாவு போல் உருட்டிப் பிசைந்து கொள்ளவும். 
  5. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அவற்றை இட்லிப் பாத்திரத்தில் வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவிடவும். கொழுக்கட்டை வெந்து விட்டதா என்று தெரிந்து கொள்ள, விரல்களைத் தண்ணீரில் நனைத்து விட்டு, கொழுக்கட்டையைத் தொட்டுப் பார்க்கவும். மாவு விரல்களில் ஒட்டவில்லை என்றால், கொழுக்கட்டை நன்றாக வெந்து விட்டது என்று பொருள். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு, கொழுக்கட்டைகளை மற்றொரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
  6. கொழுக்கட்டையின் சூடு சற்று குறைந்ததும், ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் முளைகட்டிய பயறு வகை குழம்பு ஏதாவது ஒன்றை ஊற்றி சாப்பிடவும்.

குறிப்பு:
  • இயற்கை வாழ்வியிலின் கருத்துப்படி, சமையலில் எண்ணை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் இந்த வலைப்பூவில் தரப்பட்டுள்ள பெரும்பான்மையான சிறு தானிய உணவு செய்முறைகளில், எண்ணை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதன்முதலில் சிறுதானியத்திற்கு மாறுபவர்கள் எளிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வழக்கமாக வீடுகளில் சமைக்கும் செய்முறைகளிலேயே தந்திருக்கின்றேன். இயற்கை வாழ்வியலை கடைபிடிப்பவர்கள், இதே செய்முறையை எண்ணை இல்லாமல் சமைக்கவும்.
  • இந்த செய்முறையை, நாங்களாக செய்து பார்த்தோம். நன்றாக வந்திருந்ததால், அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறோம். இயற்கை வாழ்வியல் கருத்துக்கள் படி, எந்த ஒரு உணவையும், நாம் நன்றாக பற்களால் மென்று சாப்பிட வேண்டும். அதுவே எளிதில் சீரணமாக உதவும். இக்கருத்தை மனதில் வைத்தே, சிறுதானியங்களில் களி செய்வதற்கு பதில் கொழுக்கட்டை போன்ற சற்றுக் கடித்து சாப்பிடக்கூடிய உணவு வகைகளை செய்கின்றோம்.
  • காரவகைக் கொழுக்கட்டையை மற்றொரு முறையிலும் தயாரிக்கலாம். அதன் செய்முறைக் கீழே தரப்பட்டுள்ளது:
கம்பு கார கொழுக்கட்டை
கம்பு கார கொழுக்கட்டை


  1. வரிசை எண் 1ல் கூறியபடி, மாவை தயார் செய்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி நல்லெண்ணையை ஊற்றவும். அதில் 1/4 தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு கலவையை போடவும். அவை வெடித்ததும், 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு போட்டு, அது சற்று பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். பின்னர் அதில் பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலையைப் போட்டு சில நொடிகள் வதக்கவும். அடுப்பை அணைத்து விடவும். இந்தக் கலவை சற்று சூடு குறைந்ததும், மாவு இருக்கும் பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். அதனுடன் பொடிதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்க்கவும். ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்க்கவும்.
  3. வரிசை எண் 4 & 5ல் தரப்பட்டுள்ளது போல், கொழுக்கட்டை தயாரிக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.


கேழ்வரகு (ராகி) காய்கறி கொழுக்கட்டை
கேழ்வரகு (ராகி) காய்கறி கொழுக்கட்டை

1 comment :

  1. முளைகட்டிய பயறு வகை குழம்பு சொய்முறை பகிரவும் ஐயா

    ReplyDelete