Tuesday, February 18, 2014

கவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை

கவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை
கவுணி அரிசி இனிப்பு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
  1. கவுணி அரிசி மாவு – 1 குவளை (200 கிராம்)
  2. மண்டை வெல்லம் - 1 குவளை (200 கிராம்)
  3. தண்ணீர் – 3/4 குவளை
  4. தேங்காய் – 1/2 குவளை (பொடியாக நறுக்கியது)
  5. ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
  6. எள் – 2 தேக்கரண்டி

செய்முறை:
  1. ஒரு அகலமான பாத்திரத்தில் கவுணி அரிசி மாவு, தேங்காய் துண்டுகள், எள், ஏலக்காய் பொடி போட்டு அனைத்தையும் ஒரு முறை விரலால் கலக்கவும். 
  2. மற்றொரு பாத்திரத்தில் மண்டை வெல்லத்தை பொடித்துப் போட்டு, தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கரைய விடவும். பின்னர் அடுப்பில் வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  3. சூடான வெல்லப்பாகை, மாவு இருக்கும் பாத்திரத்தில் நேரடியாக வடிகட்டவும். மரக் கரண்டி கொண்டு மாவை நன்றாக கிளறி அனைத்துப் பொருட்களும் ஒன்றாக சேருமாறு கட்டியாக பிசைந்து கொள்ளவும். 
  4. சிறிது மாவை கிள்ளி எடுத்து உள்ளங்கையில் உருட்டி, விரல்களால் லேசாக அழுத்தி கொழுக்கட்டை பிடிக்கவும். மாவு தீரும் வரை இதேபோல் செய்து முடிக்கவும். 
  5. கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும். இட்லி பாத்திரத்தில் நீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயை குறைத்துக் கொள்ளவும். 
  6. அடுப்பை அணைத்து 2 அல்லது 3 நிமிடங்களுக்குப் பிறகு மூடியை திறந்து, கொழுக்கட்டையை பரிமாறவும். 
குறிப்பு:
  • கம்பு, ராகி, சோளம், வரகு, சாமை, குதிரைவாலி மற்றும் திணை போன்ற சிறுதானிய மாவுகளிலும், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி மாவுகளிலும் கொழுக்கட்டை செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும். 
  • வெல்லப்பாகு சூடாக இருக்கும் பொழுதே மாவில் ஊற்ற வேண்டும். இது மிக முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய குறிப்பு. பாகு சூடாக இல்லையெனில் கொழுக்கட்டை சரியான பதத்திற்கு வராது.
  • ஒவ்வொரு சிறுதானியம் அல்லது அரிசி வகைக்கும் வேகும் நேரம் வித்தியாசப்படும். எனவே முதல் 10 நிமிடம் கழித்து கொழுக்கட்டையின் பதத்தை சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
கம்பு இனிப்பு கொழுக்கட்டை
கம்பு இனிப்பு கொழுக்கட்டை
சோள இனிப்பு கொழுக்கட்டை
சோள இனிப்பு கொழுக்கட்டை

ராகி இனிப்பு கொழுக்கட்டை
ராகி இனிப்பு கொழுக்கட்டை

No comments :

Post a Comment